Friday, November 19, 2010

என்று தணியும்...

பரபரக்கும் நெடுஞ்சாலை மத்தியில்
சட்டென முளைக்கிறது
ஒரு சர்க்கஸ் கூடாரம்...
முதுகிலதன் விளம்பரம் சுமந்து
ஊரெங்கும் உலா வரும் ஆட்டோக்கள்...
ஆர்ப்பரிக்கும் குழந்தைகளால்
உட்புகுதல் நிர்பந்தமாகிறது...
யானையோ ஒட்டகமோ
துர்நாற்றத்தோடு வரவேற்கும்...
கைகளில் அடங்கா எண்ணிக்கையில்
பந்துகளை விரல்களில்
சுழற்றுவானோருவன்...
கத்தி எறிந்து, தீக்குள் பாய்ந்து
பம்பரம் சுழற்றி, தொப்பி மாற்றி
பரவசபடுத்துவர்...
அரையாடை குமரி ஒருத்தி
பச்சை கிளியோடோ
பொமேரியன் நாயோடோ
அரங்கு நிறைப்பாள்
இச்சை பார்வைகளால்...
அபத்தம், அறிவின்மையால்
சிரிக்கவைக்கும் கோமாளி கூட்டம்...
விண்ணில் மிதக்கும் ஒரு கூட்டம்
நிச்சயம் ஒருவன் காலாடை
கழண்டு வீழும் விரித்த வலையில்...
ஏதும் மாறியதாய் நினைவில்லை
அப்பாவின் விரல்பிடித்து
அன்று நான்பார்த்த
அதே காட்சிகள்
சுவாரசியமின்றி இன்றும்...
தீர்ந்து போகா வாழ்க்கையின் மீதான
தூர்ந்து போகா நம்பிக்கையில்
தயாராகின்றனர் அவர்கள்
அடுத்த காட்சிக்கு...

அருண்குமார் சே

Wednesday, November 17, 2010

காலக்கிளர்ச்சி...

இருள் சூழ்ந்த பொழுதொன்றில்
ஒளித்துளி தேடி திரிகின்றன விழிகள்...
சமதளத்தில் சிறுகுன்று பெரும்பள்ளம்
யாவும் காட்டுகிறது மனத்திரை...
இடறுகிறேன் இருக்குமிடம் அறியாமல்
கசிவது ஏதேன தெரியவில்லை
புசிப்பது யாதென புரியவில்லை
பயணிக்கிறேன் பாத வழியில்...
விசையறுந்த நசையொன்று
திசை தேடி திரிய
மெல்ல கிழிகிறது
நாட்காட்டியின் பக்கங்கள்...
மனத்திரை எங்கும் பரவுகிறது
மர்மமுடிச்சவிழ்ந்த பெரும்பரப்பு
உலவுகிறேன் எனதுலகின்
அரசன் நானென...
முளைவிடும் ஒளிக்கீற்று
சுமையென படுகிறதின்று...

அருண்குமார் சே

சுவடுகள்...

முன்பொரு மழைப்பொழுதில்
ஒரு குடையில்
உன்னிடம் என்வலம் நனைய
நடந்தோம் வெகுதூரம்...
முதலிருமுறை உரசியபோது
மன்னிப்பு கேட்டாய்...
தோல்பையை நடுவில் தள்ளி
நீ நனைந்தாய் சிலநேரம்...
அருகருகே இருந்தும், கிடந்தோம்
தொடர்பு எல்லைக்கு வெளியே...
நம்மிருவர் மௌனத்தை சேர்த்து
குடையோடு பேசியது மழை...
ஏறத்தாழ முழுவதுமாய்
நனைந்த பொழுதில்
நின்று போனது மழையும்...
வெரித்தோடிய சாலைவழி
தனித்து நடக்கையில்
இன்றும் பரவுகிறது
மனதெங்கும் ஈரம்...


அருண்குமார் சே

Thursday, July 15, 2010

செம்புல பெயனீர்...

நெடுஞ்சாலை பழுதென்று


திருப்பிவிடப்பட்ட வாகனங்கள்

குறும் சந்தில் விரைவதாய்

அனுமதியின்றி பயணிக்கின்றன

உன் நினைவுகள் என்னுள்...



சாலை சிறிதென்ற சலிப்போடு

இறக்கப்டாத கண்ணாடி வழியே

தூசு பறக்கும் தெருக்களை

உள்வாங்காமல் விரையும்

சுவாரசியமற்ற உன் பயணம்...



இந்த காரு எம்புட்டு வேகமா

அழகா போகுது - என்றேங்கும்

சேரி குழந்தையின் ஆச்சர்யமாய்

உன்னை தொடர்கிறது

பேத உள்ளீடற்ற மனசு...



அருண்குமார் சே

காட்சிப்பிழை...

இங்கு தான் வைத்தேன்


நிச்சயம் தெரியும்...

காலையில் நான் பார்த்தேனே

மனைவியின் சாட்சி...

ரொம்ப நாளாகவே

செய்தித்தாள் போடுபவன்மேல் சந்தேகம்...

பால்க்கார சிறுவனோ?

பாத்திரம் தேய்க்கும் பாட்டியோ?

பட்டியலிட்டு பட்டியலிட்டு

பலனின்றி போனது பொழுது...

களைத்தோய்ந்து படுக்கையில்

இரவு விளக்கொளியில் சிரிக்கிறது

மகளின் கரடி உண்டியல்...



அருண்குமார் சே