Friday, November 19, 2010

என்று தணியும்...

பரபரக்கும் நெடுஞ்சாலை மத்தியில்
சட்டென முளைக்கிறது
ஒரு சர்க்கஸ் கூடாரம்...
முதுகிலதன் விளம்பரம் சுமந்து
ஊரெங்கும் உலா வரும் ஆட்டோக்கள்...
ஆர்ப்பரிக்கும் குழந்தைகளால்
உட்புகுதல் நிர்பந்தமாகிறது...
யானையோ ஒட்டகமோ
துர்நாற்றத்தோடு வரவேற்கும்...
கைகளில் அடங்கா எண்ணிக்கையில்
பந்துகளை விரல்களில்
சுழற்றுவானோருவன்...
கத்தி எறிந்து, தீக்குள் பாய்ந்து
பம்பரம் சுழற்றி, தொப்பி மாற்றி
பரவசபடுத்துவர்...
அரையாடை குமரி ஒருத்தி
பச்சை கிளியோடோ
பொமேரியன் நாயோடோ
அரங்கு நிறைப்பாள்
இச்சை பார்வைகளால்...
அபத்தம், அறிவின்மையால்
சிரிக்கவைக்கும் கோமாளி கூட்டம்...
விண்ணில் மிதக்கும் ஒரு கூட்டம்
நிச்சயம் ஒருவன் காலாடை
கழண்டு வீழும் விரித்த வலையில்...
ஏதும் மாறியதாய் நினைவில்லை
அப்பாவின் விரல்பிடித்து
அன்று நான்பார்த்த
அதே காட்சிகள்
சுவாரசியமின்றி இன்றும்...
தீர்ந்து போகா வாழ்க்கையின் மீதான
தூர்ந்து போகா நம்பிக்கையில்
தயாராகின்றனர் அவர்கள்
அடுத்த காட்சிக்கு...

அருண்குமார் சே

No comments: