Friday, April 10, 2009

நானும் என் குப்பைத்தொட்டியும்....

விசித்திர உரு
வீசிடும் துர்நாற்றம்
யார் நீ ?

உன்னில் உதிர்ந்த
எட்ச மிட்சங்களின் குடில்....
உன் வீட்டு குப்பைத்தொட்டி நான்....
உயிர் கொண்ட நீவீர்
குப்பைத்தொட்டி ஆனதினால்
நான் கூட ஒருநாள்
உயிர்கொள்ள ஆசை கொண்டேன்....

உயிர் கொண்டு வந்ததின்
உள்நோக்கம் என்ன?

உள்ள சுமை உள்ளச்சுமை
கொட்டிடுவேன் உன்னோடு
உலைச்சூடு பொறுத்திடு...
உங்கள் மயிர் பிடுங்கும்
களிம்பு கூட கொலுவில்
நானோ விழிகள் துளைக்காத
ஏதோ ஒரு மூலையில்....
சூழல் சுற்றமாக
எனை அழுக்காக்கினேன்
உண்மை நேயத்தோடு...
நீங்களோ
உண்மை போராளிகளை தூக்கி
என்னிலே போட்டீர்கள்...
பொறுக்க இயலாது
போர்க்கொடி தூக்கிவந்தேன்...


இப்போது புரிகிறது
எந்த இயக்கத்தின் பிரதிநிதி நீ ??


நன்கு கேட்டாய்
முட்டாள்தனத்தின்
முன்னுதாரணமாய்....
உங்கள் முதுகெலும்புகள்
முதலீடுகள் ஆகின்றன
என உண்மை சொன்னால்
நான் போராளி....
உங்கள் பரிணாமம்
பரிமாணம் அடையவில்லை
விளக்கி சொன்னால்
நான் விதிவிலக்கு...
கட்சி கொடிகளுக்கு
கோவணம் தொலைத்தீர்
எடுத்து சொன்னால்
நான் தேசத்துரோகி...
இளைப்பாறுதல் இன்றி
இடுகாட்டுகுழிகளில்
இனமொன்று நிறைகிறது
எடுத்து சொன்னால்
இறையாண்மை கொன்றவன்...
வாழிய ஜனநாயகம்....


புரிந்ததெனக்கு....
குப்பைத்தொட்டிகள் புனிதமாகிறது
மனிதம் குப்பையாகிறது.....

அருண்குமார் சே

Wednesday, April 8, 2009

இது இளமையின் தேசியகீதம்....

பூக்களில் இருந்து
புன்னகை திருடி
சிரித்து தொலைத்தாயே
என் புண்ணியம் பாவம்
எல்லாம் சேர்த்து
அரித்து எடுத்தாயே
வலி ஒன்றும் உணராமல்
கொலையாய் ஆனேனே
உளி ஒன்றும் உரசாமல்
சிலையாய் போனேனே
ஏனடி எப்படி தெரியவில்லை
ஏதும் எதுவும் புரியவில்லை....

அழகிப்போட்டி போகாதேடி
அரங்கதிரும் உன் நிழலில்
ஆதவனே கீரிடம் ஆவான்
அலை ஆடும் உன் குழலில்
கருவிழிகள் ஓரத்தாலே
உயிருக்குள் தீ வைத்தாய்
கண்ணிமைகள் மூடாவண்ணம்
முள்வைத்து ஏன் தைத்தாய்?
சித்தம் நடத்தும்
யுத்தம் நிறுத்த
ஒரு மொழி சொல்லிவிடு
சிகரம் உடைந்து
துகளாய் போனேன்
இயன்றால் அள்ளி எடு...

எரிமலையின் குளம்பள்ளி
என்மீது பூசாதே
எமன் கொண்ட பாசக்கயிற்றை
நீ வாங்கி வீசாதே
எரிதணலில் தள்ளிவிட்டால்
வேகாமல் உயிர்வாழ்வேன்
எதிர் பதிலை சொல்லிவிட்டால்
சாகாமல் பிணம் ஆவேன்
தேகம் முழுதும் தேனாய் ஊரும்
வரம்தனை தந்து விடு
காதல் தீயில் கருகிப்போனால்
உரமென தூவி விடு.....

அருண்குமார் சே

ஒரு பேருந்து நிலையம்....

முதலிரவு தம்பதிகளாய்
முகம் உரசி
மோகம் தணிந்து
புறமுதுகிட்டு
வியாபித்து கிடக்கும்
பேருந்துகள் நடுவே...

புதுப்பட பாடல் செவிகிழிக்க
தப்பு தப்பாய் பரிமாறப்படும்
தேநீர் கோப்பைகள் ....

ஊக்கு குத்தி கொண்டுவந்த
துணிக்கடை பை
பேருந்து துரத்தும் போது
அறுந்து விழும்...

சின்ன சின்ன சட்டசபை
இட ஒதுக்கீட்டில் சண்டையிடும்...

உலக சந்தை, உழவர் சந்தை
பரவி கிடக்கும் நடைபாதை எங்கும்
வழக்கு நடக்கும் நீக்கிட கோரி
வாழ்க்கை நடக்குமா??...

மூத்திரனாற்றம்
குடற்பைநிறையும்...

சஞ்சீவி மலையோடு அனுமன்
தார்ச்சாலையில் பிச்சை எடுப்பார்....

யாவும் கடந்து
ஏதோ தேடலில்
நிகழ்ந்தேறிக்கொண்டேயிருக்கின்றன
முடிவில்லா பயணங்கள்...

அருண்குமார் சே

Tuesday, April 7, 2009

கவிதை என்பது...

கவி எழுதும் எண்ணத்தில்
விரைந்து ஓடி வெண்தாள் எடுத்து
பேனா கிறுக்கி சோதனை முடித்து
மல்லாந்து படுத்து மண்டையை குழப்பி
மொட்டை மாடி ஏறி நட்சத்திரம் எண்ணி
தாடி தடவி தவித்து துடித்து
ஏதும் எழுத தோன்றாமல்
அதன் அதன் இருப்பிடம் எல்லாம் சேர்த்து
விளக்கணைத்து படுக்கையில்.....
காதுக்குள் கவிதை சொல்லி பறந்தது
என் கைக்குள் சிக்காத கொசு....

அருண்குமார் சே

நம்மில் யாரோ....

விரிந்து பரந்த மணற்பரப்பில்
உதிர்ந்து விழுந்த ஒரு
பொத்தான் தேடி திரிபவனாய்
ஒரு சிறு பயணம்....
முழுதும் சிதைந்த
விகார நிலையில்
பிண்டம் ஒன்று
விழுந்து கிடக்கிறது...
நிற்பதின் அவசியமோ அவகாசமோ இன்றி
ஏறி சென்றிருக்க வேண்டும் பல....
சற்றே நெருங்கி
சடலம் எதுவென பாத்தேன்.....
அதிர ஒன்றும் இல்லை
வெறும் மானுடம் தான்....
ஐயோ மறந்தே போனேன்
காபி ஆறிவிடும்
காலம் அனுமதித்தால்
பிறகு பார்க்கலாம்....
அஞ்சலியோ கண்டனமோ
எவரேனும் தெரிவித்தால்
வீட்டு தொலைக்காட்சி
சொல்லாமலா போகும்...

அருண்குமார் சே

யுகம் கடந்த முகம்....

உருக்கி ஊற்றி
பிதுக்கி தள்ளிய போது
நிசப்த கூடுடைத்து
எழுந்த முகாரி
இன்னும் ஆழ்மனதில் ஒலிக்கிறது
ஆசுவாசமற்று....
ஒற்றை உயிர் திரிகிறது
ஓராயிரம் சிலுவை சுமந்து...
உருக்கி வார்த்து
உருவாக்குதல் சரி
உருவானவனை எதற்கு
அச்சில் வார்க்கிறிர்கள்....
நிழலாய் நகலாய்
செத்தொழிந்து போகவோ
மென்று துப்பிய வாழ்கையை
தின்று வாழவோ விருப்பமில்லை.....
தேடல் எல்லாம்
யுகம் கடந்த ஒரு முகம்.....

அருண்குமார் சே

எல்லாம் சொல்ல முடிவதில்லை, எத்தனை முறை சொன்னாலும்.

செரிக்காத உணவாய்
தொண்டைக்குழி வரை வந்து போகிறது,
சொல்ல படாத காதல் ஒன்று...
இருபதின் இளமைகளில்
இருளை போர்த்திக்கொண்ட
ஒரு மாலை பொழுதில்
நேர்ந்ததாய் ஞாபகம்...
தடாகத்தில் விழுந்த கல்லாய்
பார்த்த நிமிடத்தில் அலைகளை பரப்பினாய்...
உள்ளுக்குள் சுமந்த மாத்திரத்தில்
உடனடியாய் கவி ஆனேன்
நீரோவின் பிடில் இசையில்
தாஜ்மகாலின் மடியில் கிடந்தேன்...
குரல் வளை நெரிக்கும்
சமூகத்தின் மூச்சு திணரலில்
எதிர் திசை ரயில்களாய்
காணாமல் போனோம்...
நெடும்சாலை மைய கோடுகளாய்
நரை தெரிய
நாற்பதின் பிற்பகுதியில்
கண்ணாடியில் படர்கிறது
மெல்லிய அவள் நிழல் உருவம்...
இரகசியமாய் அழுகிறேன்
அவசியமாய் சிரிக்கிறேன்
மருந்தாய் ஏற்கொண்ட வாழ்க்கை நகர்கிறது
அதன் போக்கில்...
இன்றும் ...
செரிக்காத உணவாய்
தொண்டைக்குழி வரை வந்து போகிறது,
சொல்ல படாத காதல் ஒன்று...

அருண்குமார் சே

சுயம்....

நான் யார்?
நெருப்பா? விளக்கா?
எரிகிறேனா? எரிக்கிறேனா?
எரிகிறேன் எனில் எரித்தல் யார்?
எரிக்கிறேன் எனில் எரிதல் யார்?
எரிதலா எரித்தலா எது என் சுயம்?
எரிதல் எனில் எரித்தல் ஏன்?
எரித்தல் எனில் எரிதல் ஏன்?
எரிந்தால் என்ன மிஞ்சும்?
எரித்தால் என்ன எஞ்சும்?
விடியல் அற்ற இரவிலும் கொடிது
விடைகள் அற்ற கேள்விகள்....
சுயம் அறிதலின் அரிது
வேறொன்றும் இல்லை....

அருண்குமார் சே

பரிணாமத்தின் விளிம்பில்...

வெளிச்சொல்லாது விழுங்கிய புழுங்கல்களில்
வெடிக்கிறது இதயம்...
மூர்ச்சை அற்று கிடப்பவன் முகத்தில்
தெளிக்கப்படும் மூன்றாமவன் குருதி...
தேன் நக்கும் வாயாய்
விரல்களை விழுங்கும் லாட்டரிகள்....
பொற்கோயில் ஆகட்டும்
திரு ஒடுகளே முன்னால்...
கதவுகளுக்குள் விற்கப்படும் கற்பு
காரணத்துடனும்....
கோவணம் விற்று
மூன்றாம் ஆட்டத்துக்கு டிக்கெட்டு....
வலைக்குள் எலிகள்
வாழ்க்கைக்குள் நீங்கள்....
களைகலுக்கு வேலி இட்டு
பயிர்களை மறந்து போன பரிதாப வாழ்க்கை...
விரல்களின் அழகிற்காக
நகங்களின் நிறம் மாற்றும்
நாடக வாழ்க்கைக்கு
நான் கூட வருவேன்.....

வால் முளைத்து
கிளை தாவும் பொழுதில்....

அருண்குமார் சே

எல்லாம் தொலைத்து...

எப்போதும் என் ஆளுகைக்குள்
அடங்கியது இல்லை அது....
மூச்சினை அடக்கி
முக்தி நிலையில் தான் வாசிக்க வேண்டும்...
அதன் பொத்தல்கள் அடைத்தால் ஒழிய
எனக்காய் இசைப்பதில்லை.....

துளைகள் ஏதும் அற்ற
மூங்கில் பிரம்பொன்று வாங்கி கொண்டேன்....
ஏதும் தொலைக்காததாய்
எல்லாம் தொலைத்து...

அருண்குமார் சே

விற்பனை முடிந்த விடியல்கள்....

தாளிடப்பட்ட கதவுகளுக்குள்
தயக்கமின்றி நிகழ்ந்தேறுகிறது...
வியர்வை எச்சில்
இந்திரியம் இல்லாமல்
கழிந்ததில்லை ஓர் இரவும்...
ஆடை சுமையென அகற்றி
பரவும் அடுத்த சுமை ஒன்று....
கடித்த உதடுகள்
நகங்களின் கீறல்கள்
சூறையாடப்பட்ட தேகம்
அறுத்தெறிந்த நரம்பு
ஏதும் புதுமையின்றி
என்றும் என்றென்றும் ....
கன்னிகழியா மனசு வலிக்கிறது
பகலில் ஆணுடன் செல்லும்
சராசரி பெண்ணை
சாலையில் பார்க்கும்போது....

அருண்குமார் சே

சாதீ....

ஒட்டு வீடு பார்க்காத
ஓலை குடிசை கிராமம்
உன் பாட்டன் என் பாட்டன்
ஒன்னா வாழ்ந்த கிராமம்....
மேற்கால மூலையில
குருவி கூடாட்டம்
செல்லப்பன் குடிசை....
காக்கா துப்பி போன
விதை வளர்ந்த வேப்ப மரம்
வீட்டுக்கு முன்னாடி
வேர் விட்டு நிக்குதடி.....
கிராமத்து திருவிழான்னு
ஊர் மொத்தம் கூடி போக....
கொல்லையில குளிக்க போனான்
செல்லப்பன் அதிசியமே....
குளிக்க போன கோமாளி
இடுப்பு துண்டை கலட்டிபுட்டான்
மரத்தை சுத்தி கட்டிபுட்டான்....
ஊருக்குள்ள வந்த குப்பன்
துணி மரத்தை பார்த்துபுட்டான்
குல தெய்வம் ஆக்கிபுட்டான்...
கோவணத்தை அவன் கேக்க ....
குல தெய்வம்னு இவன் மறுக்க
வாய் சண்டை பெருசாச்சு
கை கலப்பு உருவாச்சு....
கூட்டம் கூடி போக
தடுக்கத்தான் நூறு பேரு....
கோவணத்தான் ஒரு சாதி,
குலதெய்வம் ஒரு சாதி,
தடுத்தவன் ஒரு சாதி,
தள்ளுனவன் ஒரு சாதி,
உள்ள குடிசை இரு நூறு,
வந்த சாதி மூந்நூறு .....
வேண்டாம்னு நான் சொல்ல
சாதி மொத்தம் மூன்னுத்தி ஒன்னு ஆச்சு...
விதை போட்ட காக்கா செத்து
விடியல் நாலு ஆயாச்சு....

அருண் குமார் சே

ஐங்குறு கவிதைகள்....

1) என்ன சொல்ல....

முன்னறிவிப்பு இன்றி சிரிக்காதே
தப்பாய் போகிறது வானிலை அறிக்கை....

2) கடைசி நிமிடம்....

எப்போது சொல்வது உன்னிடம்
நீ இறுதியாய் பிரிந்த அந்த வலியை...

3) நாத்திகம்....

உண்டு என்பதின் மீதான
இல்லை என்ற நம்பிக்கை....

4) வாழ்க்கை....

கழன்று விழும்
ஒற்றை கால் செருப்பை
மீட்டெடுக்கும் அவகாசம் இன்றி
விரையும் பேருந்துடனே
கரைகிறது வாழ்க்கை....

5) நாளை....

நாளை நிட்சயமெனில் சொல்லுங்கள்
இன்றேனும் உறங்குகிறேன்....

அருண்குமார் சே

நிஜங்கள் அற்ற நிழல்கள் .....

பேயேன இரையும் அலாரச்சத்தம்
நித்தமும் பறித்து எடுக்கிறது
படுக்கை விட்டு....
கடிகார முட்களுக்குள்
தொலைந்த வாழ்க்கை
என்றும் போல் துவங்குகிறது
சற்றும் மாறாமல்....
விட்ட இடத்தில
தொடங்குகிறது ஆட்டம்
வித்தியாசமின்றி
விளக்கங்களின்றி....
ரசம் போன கண்ணாடியாய்
ரசனை அற்ற பயணம்
பரிச்சயமற்ற முகங்கள்
பழக்கமற்ற புன்னகைகள்
இன்னும் நம்மை சுற்றி....
சட்டென அறுந்து போக கூடும்
இந்த சமரச வாழ்க்கை....
ஒரு நாளேனும் வாழவேண்டும்
அரசனாய்
அகதியாய்
பிட்சுவாய்
பிட்சைக்காரனாய்
குறைந்த பட்சம் மனிதனாய்....

அருண்குமார் சே

பூ பூத்த பாலைவனம்......

நிசி எல்லாம் உழச்சாலும்
பசி தீர வழியுமிள்ள
பலி கொடுத்தும் மகமாயி
எலிக்கறி தான் திங்க வச்சா.....
கிழிச்சு கட்டுன கோவனத்துல
இன்னும் நாலு கிழிசலு
நாங்க முக்குளிச்சா
அத்தனையும் கிளிஞ்சலு.....
கலப்பை பூட்டுன காளமாடு
இருட்டிபுட்டா ஓய்வெடுக்கும்
களைப்பு அறியா எருமைமாடு
நான் கண்ட சுகம் ஒண்ணுமில்ல....
கம்ப்யூட்டர் தட்டிபுட்டா
பிசா கோக் உனக்கு வரும்
அடகு வச்சு விதை போட்ட
என் ஆத்தா தாலி எப்ப வரும்....
வேசியா பொறந்தா கூட
விலை சொல்லும் உரிமை உண்டு
விவசாயா பொறந்ததால
இன்னும் அந்த உரிமை இல்ல....
போட்ட விதை முளைக்கவில்ல
சாமிகுத்தம் ஆகிபோச்சாம்
விளைஞ்ச பின்னும் ஒண்ணுமில்ல
சாமி குத்தம் செஞ்சிடுச்சோ....
முலப்பாலு இல்லாம
எம்புள்ள சாவக்கிடக்க
ஞானப்பால் குடுத்த கதை
நானெப்படி நம்புறது....
விளச்சவன் வெல சொல்லும்
விடியல் ஒன்னு பொறக்க வேணும்
சொடலமாடன் நீ இருந்தா
கண்ண கொஞ்சம் தொறக்க வேணும்....

அருண்குமார் சே

நீயற்ற நீண்ட பொழுதுகளில்....

கலிங்க அசோகனாய்
வெல்லும் தருணமும்
இழத்தல் சொல்கிறது....
சொல்ல இயலா உணர்வு
உள்தொண்டை தொடுகிறது....
நிர்மூலம் நங்கூரம் இட்ட
நிலை கொள்கிறது...
காண்பவை யாவும் கடினம் கடினம்....
திருவிழா கால பேருந்தாய்
நிறைந்த மனது
மரித்த நிலவை எரித்த வானமாய்
சூன்யமாய்....
நானே எனக்கு கடும்சுமையாய்
நீயற்ற நீண்ட பொழுதுகளில்....

அருண்குமார் சே

வலுவற்று....

நித்தம் நூறு முறை ஒத்திகை பார்த்து,
வறண்டு போன வார்த்தை எல்லாம்
முரண்டு பிடித்து இழுத்து கட்டி
வேல் கம்பு விழி அம்பு
விலாவினில் பாய்ந்து
உயிர் கொண்டு போகாமல்
உறவாடி கொன்றதை...
கண்ணாடி சிற்பம்
கையாளும் விதம் சொல்லி
நீ உணராத காதலை
எப்படி சொல்வது மீண்டும்
வலுவற்ற வார்த்தைகளால் .....

அருண்குமார் சே

சும்மா வெறும் கவிதையில்ல.....

தெக்கத்தி மூலையில
திக்கத்து நின்னாலும்
தேசிங்குராஜன்
நாந்தான்னு சொன்னவளே.....
கற்புன்னு சொன்னாலே
எரிச்சவ எரிஞ்சவ
இருபேரு கத சொல்லி
இறுமாப்பா போனானே....
அவன் கடவா பல் உடைச்சி
கையில தரவேணும்
மவராசி உன் பெரும
மடையனுக்கு தெரியலையே......
அழகுன்னு சொன்னாலோ
அது உன்ன திரும்பி பாக்கும்
இது அறியா கூட்டம் தான்
போட்டியில பொழுது போக்கும்....
கடிகார முள் கூட
கால் வலிச்சி நின்னதுண்டு
கண்மணியே நீ நின்னு
ஒரு நாழி பார்த்ததில்ல.....
வரவு செலவு பார்த்ததில்ல
வந்த உறவு கவனிச்சதில்ல
அத்தனையும் நீ தானே
ஆணிவேரா பாத்துக்கிற....
தாத்தா கதை தேவதையும்
ஆத்தா முலபாலும்
சேத்தா நீ தானே
பாத்தா தெரியாதா?....
என் கோண புத்தி நெனப்பெல்லாம்
ஞான கீர்த்தி நீ அறிவ
உனபத்தி ஒரு நாளும்
நான் அறியாம போனாலும்....
பத்தாளு போனாலும்
பலமாத்தான் நானிருக்கேன்
ஒத்தாளு நீ போனா
உலகம் விட்டு போகுதடி....
எமனே வந்தாலும்
போகாத தன்னால
என்ன அனுப்பிட்டு
நீ வாயேன் பின்னால....
நெனபெல்லாம் நீதாண்டி
நெருபாட்டம் எரியுற
நிசமாத்தான் சொல்லுறேன்
எப்படி சொல்ல தெரியல....
சாவகுள்ள சத்தியமா
உன்கடன தீர்த்துடுறேன்
இல்லையா அடுத்த சென்மம்
நீயா நான் பொறந்துடுறேன்....

அருண்குமார் சே

உரு மாறும் நேரம்.....

முகமூடி விற்பனை பெருகும்
மறந்து போகும் கால கொடூரம்
மீண்டும் வருவார் வாசல் தேடி
மீண்டு வரா காரணம் கூறி....
அம்புலி சோறூட்டி
வளந்த பழக்கமது
இன்னும் தொடருதடா
இன்னல் பெருக்குதடா....
ஓட்டு சந்தை தேசமடா
ஆட்டு மந்தையின் மோசமடா
சாதிக்கு பிறந்த கூட்டம்
சாதிக்க போவதென்ன??.....
மும்பை எரிந்த சாம்பல் பறக்கும்
மும்தாஜ் பாடலில் எல்லாம் மறக்கும்
இலங்கை யுத்தம் ரணமாய் வலிக்கும்
ரகுமான் ஆஸ்கர் குணமாய் இனிக்கும்....
குனிந்து குனிந்து பழகியதாலே
எழுந்து நிற்க துணிச்சல் இல்லை
விழுந்து விழுந்து வணங்கியாதாலே
விளைஞ்ச பலனும் ஒண்ணுமில்லை....
யாரென்று குற்றம் சொல்ல
வியாபார சந்தையிலே
உருவாகும் மாயை அது
உதவாத மொந்தையிலே.....
சாகா வரம் பெற்ற
சாம்ராஜ்யம் இங்கு உண்டு
இடுகாடு பிணம் கூட
உரு மாறும் சக்தி உண்டு....

அருண்குமார் சே

ஐயன்மீர் மன்னிப்பீர்...

விரல் விட்டு நீளும்
நகம் களைதல் போலே
நன்மையாய் உண்மை சொல்வேன்
ஐயன்மீர் மன்னிப்பீர்....
கால பெருவழியில்
நீவீர் கண்டதென்ன?
ஞால உருவழியில்
நீவீர் கற்றதென்ன?
ஈறு போகும்
தன்னொற்று இரட்டிக்கும்
ஆதி நீளும்
வாழ்வுக்கு போதுமா??
அசோகனின் மரம்
அலெக்சாண்டர் குதிரை
அக்பரின் அவை
அடுத்தது என்ன??
ஆவியாதல் பதங்கமாதல்
பாஸ்பரஸ் கந்தகம்
அமீபா ஆக்டோபஸ்
சிற்றறிவு நிரப்பவில்லை.....
பாராத வாழ்க்கை இன்னும்
பள்ளத்தில் கிடக்கிறது
ஊராத கிணறு போலே
உள்ளம் தான் இருக்கிறது....
சில பொழுது கல்வி
சில பொழுது காதல்
சில பொழுது கடமை
ஒரு பொழுது மரணம்...
உன்வாழ்க்கை இது தானே
உதவாத கனி தானே
பழகாதே இவ்வாழ்க்கை
பன்றியும் தான் வாழ்ந்திடுதே...
விண்மீன் சந்தை வியாபார விந்தை
எல்லாரும் சொல்லி போனால்
வாழாத வாழ்க்கை அது
வீணாக எங்கே போகும் ??
அடிப்படை ஒன்று தான்
அகப்புழுக்கம் அழித்தல்
அன்றேல் நாமும்
அடிமையாய் ஒழிதல்....

அருண்குமார் சே

அடி மத்தாப்பு மனசுக்காரி...

கருவாச்சி காவியமே
கட்டுடைத்த ஓவியமே
நெஞ்சு கூட்டுகுள்ள
பஞ்சா அடஞ்சவளே...
குத்த வச்ச பொட்டப்புள்ள
நூறு பேரு இருந்தாலும்
பத்த வச்ச ஒத்த புள்ள
பாவி மக நீ தானே....
முத்தாத முத்து ரெண்ட
முந்தானை மறைக்கும் போதே
பொத்தாத ஊர் வாயி
பொழப்பத்து பேசுதடி....
கிறுக்கு பிடிச்ச பய
முறுக்கும் சண்டி பய
உன் கொலுசு மணிக்குள்ள
கொலு பொம்மை ஆனேனே....
அம்மன் திருவிழான்னு
அச்சடிச்ச சூட்சமம்
உன்ன பாக்கதான்னு
ஊருக்கு தெரியாது....
கள்ளிப்பாலு செடிதானே
கல்வெட்டா மாறுச்சு - உன்
நிழல்பட்ட நெனப்புலதான்
ஊர் கேணி ஊறுச்சு...
உன் பாவாடை நூலுகுள்ள
மனசு மட்டும் சிக்கிகுச்சு
ஒத்தசடை ரிப்பன்குள்ள
என் உசிரு தங்கிடுச்சு....
விட்டதுல கட்டி வச்ச
விறால்மீன் சட்டி அத
அப்பன் ஆத்தா அறியாம
அமிர்தமா கொண்டு வர....
விறால் எது விரல் எது
தெரியாம நான் கடிக்க
செல்ல கோவம் அதுக்கு
சொத்து எழுதி வைக்கலாம்டி....
அட்டை வாங்கி தந்ததில்ல
அடுக்கு மொழி சொன்னதில்ல
மேட்டுகுடி பொழப்பெல்லாம்
மேம்போக்கு வேசம்தாண்டி....
என்னைக்கு சொல்லிகிட்டோம்
காதலிக்கிறோம் கருமமுன்னு
நெனப்புல நெருப்பெரிய
நெசந்தான்னு புரிஞ்சிகிட்டோம்....

அருண்குமார் சே

Monday, April 6, 2009

சலனமற்று நகரும் இரவுகள்....

வெளிச்சம் கிழித்தெறிந்து
உட்பரவிய காரிருள் பொழுதொன்றில்
நிசப்தம் உடைத்தெறிகிறது
யாதொன்றுமற்ற சூன்ய வெளி....
மனம்பரவும் நம்பிக்கையற்று
மார்பு மேய்ந்தடங்கும்
உன்னில் நிறைந்திருப்பதெல்லாம்
மயான பிணம் தின்னும்
மாக்கள் வாசம்...
புணர்ந்தடங்கி சாய்கையில்
கடைவாயில் குருதிவழிய
கொடுரமாய் விழுகிறது
உனதந்த பிம்பம் உள்மனதில்....
அனுமதி அவசியமற்றுபோயினும்
ஆயத்தம் செய்தெடு
ஆசுவாசம் மெய்கொடு
அமைதி யுத்தம் உயிர்தொடட்டும்...
சற்றே தளர்த்து எறி
உனதிந்த சர்வாதிகாரம்
சலனமற்று நகரும் இரவின்
சாவொன்று நிகழும் விடிதலில்....

அருண்குமார் சே

நான் வளர்த்த போதி மரம்....

ஐம்புலன் அடக்கி
இரு புருவம் இடையே
நிஷ்ட ஜோதி மூட்டி
அகிலம் துண்டித்து
அர்ச்சனை நூறு சொல்லி
நெய் விளக்கொளியில்
நெடுநேரம் வெந்து
பஞ்சமாபூதங்கள்
பாதம் கழுவி
மும்மூர்த்திகள்
முழுநாமம் முழங்கி
நிஷ்டை கலைத்து
திரும்பி பார்த்தேன்
பட்டு போயிருந்தது
பாதி மரம்......

காற்றோடான பலப்பரிட்சையில்
கிளைவிட்டு கீழ் விழுந்த
குருவி கூடொன்று எடுத்து
மீண்டும் கிளைசேர்த்த
கணநேர பொழுதொன்றில்
என் பின்னே வளர்ந்ததொரு
புத்தம் புது போதி மரம்.....

அருண்குமார் சே