Friday, March 22, 2013

இழப்பின் பிறப்பு...

அறவழிகள் யாவும் அகதியாய் போயின
காந்தியம் போதும்
என் கணிப்பொறி மாற்றி
கனரக துப்பாக்கி ஒன்று கொடுங்கள்...
என் மொழி என்ற கவசம்
தன் இனம் என்றொரு விலாசம்
வேண்டாமடா ...
அனகொண்டாவும், டைனோசரும்
கொரிலாவும், கோட்சிலாவும்
கொல்லப்பட வேண்டியவை எனில்
சகமனிதன் குருதி குடிக்கும்
யாவும் கொல்லப்பட வேண்டியவையே ...
புலி என்று கூறி
கூண்டில் அடைப்பீர்
அன்றேல் அழி என்று கூறி
குண்டு துளைப்பீர்
ஆகட்டும் போ என்றே
அனைவரும் சேர்ந்தால்
சாகட்டும் என விடுவீரோ
ஒரு சரித்திர கூட்டத்தை ...
அறுத்தெறிந்த மார்புகளா
உம்மேல் அணுகுண்டு வீசின
அரும்பா மொட்டுகளா
உம்மேல் ஆயுதம் தொடுத்தன...
உமிழ் நீரில் தரித்ததோ
உன் தாயின் கர்ப்பம்
அரியாசனம் பெறவா
இத்தனை அற்பம்...
அட சீ .... போதுமடா
உங்கள் இறையாண்மை கொள்கை
நீங்கள் இரைகொண்ட
எங்கள் ஆண்மையின் வலிமை ...
வாக்கு சாவடிகளில் மட்டுமே
நீண்ட சுட்டுவிரல்கள்
வழக்காட நீள்கிறது
உங்கள் போக்குகளில் சென்ற
வையம் சற்றே மீள்கிறது ...
இதுவே தருணமென
இதயம் கொள்ளுங்கள்
இல்லை இனியும் முடியாதெனெ
இடுகாடு செல்லுங்கள் .....

அருண்குமார் சே

Thursday, March 21, 2013

நான் சிலையாகிறேன்...

சிலையோடு பேட்டிகாண்பது
சிறுமையல்ல நண்பர்களே
நிலைபெறா மானுட வாழ்வுதனில்
சிலைபெறல் எளிதல்ல...
எப்படி அடைந்தாய் இத்தனை தூரம்
என்ன சுமந்தாய் உன்னில் பாரம்
மெதுவாய் துவங்கினேன்...
பொதுவாய் கருவாய்
உருவாய் உருவான ஒன்று
சிலையாய் நிலையாய்
நிலைத்ததின் சூட்சமம் சொன்னது...
அரசியல் அரியணை அத்தனையிலும்
அடைக்கப்பட்ட ஆருயிர் எண்ணிக்கை சொன்னது...
புதைக்கபடா புராணங்கள் -
இன்னும் வளராத வரலாறுகள் -
சொன்னால் சலிக்காத
சரித்திரங்கள் சொன்னது...
தட்பவெட்பம் தாங்கும் தேகம்
இச்சை பிச்சை ஏற்கா தீரம்
சிலை கொள்ளும் அது
நீ என சிறுமை செய்தது...
உண்மையற்ற உயிர்களைவிட
உணர்ச்சியற்ற தான் மேலென
பெருமை சொன்னது...
சற்றே நான் திகைக்க
உள்ளூர் உதாரணம் சொல்லவா என்றது...
சரியென சிரமசைக்க,
சிலம்போடு ஒருத்திக்கு
மதுரை மிரண்டதை விட
சிலையான பின்னாலே
சென்னை மிரண்டது
அதிகமடா என்றது...

அன்புடன் அருண்குமார் சே

எங்கென தேடிட!!!

தொட்டாஞ்சிணுங்கியின் சிணுங்கள்
வீழும் அருவியின் பேரிரைச்சல்
தூவும் மழையின் ஈரம்
வீசும் காற்றின் மென்மை
கிளை விரித்த மரத்தின் நிழல்
மொட்டவிழ்ந்த பூவின் வாசம்
ரீங்காரமிடும் கொசுவின் சிறகு
ஓடும் நதியின் ஒரு சுதி
தகிக்கும் ஒளியின் வெட்பம்
யாவும் பதிக்கின்றன அதனதன் இருப்பை...
நான் வந்து சென்ற சுவடு தெரிவதில்லை
எனக்கும் கூட!!

அருண்குமார் சே