Friday, October 28, 2011

நான் கடவுள்....

யுகம் யுகமாய் பொறுத்துவிட்டோம்

தேவகுமாரனோ தேவதைகளோ

வந்தெம்மை மீட்கவில்லை...



அவதாரம் எடுத்து வந்து

அடியேர்களை காக்கவில்லை

அத்தனை சாமியும்...



ஐயா தேவகுமாரா!

நகர போக்குவரத்து நெரிசலில்

வரும் வழியில் தொலைந்தாயோ?



நாசி துளைக்கும்

குரல்வளை குமட்டும்

மூத்திர நாற்றத்தோடு

முச்சந்தியில் தூங்கியதுண்டா?



முதுகெலும்பு நொறுங்க

சுமந்து சேர்த்ததில்

மூணுவேளை உணவிற்கே

மூச்சுமுட்டுது அறிவாயா?!



மலப்புழுக்களை விடவும்

மலுங்கிய வாழ்க்கை

மனிதக்குழுக்கள் வாழ்வது தெரியாதா?!



நாங்கள் மட்டுமென்ன

நீ எழுதியாய் நம்பப்படும்

வாழ்க்கை புத்தகத்தில்

அச்சு பிழைகளா??



உன்னோடு கேட்பதெல்லாம்

வாழ்வல்ல! வரம் அல்ல!

அவதாரமல்ல! அனுகிரகமல்ல!

கருணையில்ல! மகிமையல்ல!

ஒப்பந்தம் - ஒப்பந்தம் மட்டுமே....



எங்கள் சூரியனை

நாங்கள் விதைப்போம்

எங்கள் மழைத்துளிகளை

நாங்கள் தெளிப்போம்...



ஜனனம் மரணம்

இரண்டும் வெல்வோம்

ஒரே ஒரு உறுதி கொடு

எங்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என....



அருண்குமார் சே

வாழ்விலக்கணம்....

தன் ஒற்றொடு மட்டும்

இரட்டிக்கும் சுயநலம்...

உயிர் என வரின்

விட்டோடும் பேதமை...

உடற்சதைக்காய் உயிர்விடும்

சபலம், அவலம்...



ஆதியில் நீண்டது

இடை இடையே குறைந்து

ஈற்றில் தொலைந்ததே நிச்சயம்...



இயல்புகள் விகாரங்களாய் மிகைப்பட

விகாரங்கள் இயல்பாய் நடந்தேறுகிறது...

வன்புணர் வார்த்தைகளிலெல்லாம்

மறைந்து போகிறது எழுத்துக்களின் காயம்...



இலக்கணம் இதுவென ஆனபின்

எங்கனம் வழக்குரைப்பது?



அருண்குமார் சே

சாபமீட்டும் தனித்தவம்....

கன்னக்கோலிட்ட கனதளத்தின்
உள்ளீடற்ற துவாரமாய் சிரை
எந்த அகரமுதலியும் பொருள்விளக்கா
கூடி கதைக்க இயலா வாழ்க்கை சிறை...
நீல வான்நிற காதல் பறவை
கற்காரையாய் உருமாறும் பொழுதொன்றில்
இயல்பாக்கல் இல்லா ரணம் ...
சார்பாண்மை அற்ற சாமங்களில்
சல்லடை துளைத்து உருகியோடும்
வீதிவழி நேச பிழம்பொன்று...
பொது சராசரியில் பதக்கூறெடுத்தால்
விஞ்சி நிற்பது எதுவும்
விதை அல்ல பதர்...
நிலைப்பு தன்மை தொலைந்த
அண்மையில் முடிவுள்ள
இடுக்குவாழ் விலங்குகள்...
உருப்பெருக்காக் கருவிகள்
காந்தப்புயல் வீசினும்
கவர்வது இல்லை...
ஓர இடைவெளி இன்றி
நிறைகிறது வையம்
இணைசேரா கோடுகளில்...
தனிமை கூடுதனில்
அடைகாத்த யாவும்
தந்தவை எல்லாம் வெறுமை...
நிலைப்புறுத்தும் நினைவுகள்
தாக்கிடும் ஆயுதமாய்
அனுதினமும்....

அருண்குமார் சே

Thursday, May 12, 2011

யாவிலும் யாவும் உள...

சட்டமிடப்பட்ட என் சாளரம் வழியே
சற்றும் அனுமதியின்றி உட்புகுந்து
அசட்டை செய்கிறது ஒரு சிட்டுக்குருவி...
அதனலகில் கொணரும் யாவும்
தன்னழகு பெண்ணழகின் முன்னழகு...
நிசப்த அலைவரிசையில் இசைக்கும்
எந்தன் தனிமை கூடுடைத்து...
மூர்க்கமாய் போரிடும்
முணுகளோடு கொஞ்சும்
சாளர கண்ணாடியில் படியும்
தனதந்த பிம்பத்தோடு...
சின்ன கண்சிமிட்டும்
மெல்ல தலையசைக்கும்
சட்டென சிறகடிக்கும்
நிமிடத்தில் மறைந்து போகும்...
அருகில் செல்ல விழிகளில் படரும்
உதிர்ந்த சிறகுகளும்
உதிர்த்த குப்பைகளுமாய்
நாசி துளைக்கும் அதன்
எச்ச மிச்சங்களோடு...

அருண்குமார் சே