Tuesday, April 7, 2009

ஐயன்மீர் மன்னிப்பீர்...

விரல் விட்டு நீளும்
நகம் களைதல் போலே
நன்மையாய் உண்மை சொல்வேன்
ஐயன்மீர் மன்னிப்பீர்....
கால பெருவழியில்
நீவீர் கண்டதென்ன?
ஞால உருவழியில்
நீவீர் கற்றதென்ன?
ஈறு போகும்
தன்னொற்று இரட்டிக்கும்
ஆதி நீளும்
வாழ்வுக்கு போதுமா??
அசோகனின் மரம்
அலெக்சாண்டர் குதிரை
அக்பரின் அவை
அடுத்தது என்ன??
ஆவியாதல் பதங்கமாதல்
பாஸ்பரஸ் கந்தகம்
அமீபா ஆக்டோபஸ்
சிற்றறிவு நிரப்பவில்லை.....
பாராத வாழ்க்கை இன்னும்
பள்ளத்தில் கிடக்கிறது
ஊராத கிணறு போலே
உள்ளம் தான் இருக்கிறது....
சில பொழுது கல்வி
சில பொழுது காதல்
சில பொழுது கடமை
ஒரு பொழுது மரணம்...
உன்வாழ்க்கை இது தானே
உதவாத கனி தானே
பழகாதே இவ்வாழ்க்கை
பன்றியும் தான் வாழ்ந்திடுதே...
விண்மீன் சந்தை வியாபார விந்தை
எல்லாரும் சொல்லி போனால்
வாழாத வாழ்க்கை அது
வீணாக எங்கே போகும் ??
அடிப்படை ஒன்று தான்
அகப்புழுக்கம் அழித்தல்
அன்றேல் நாமும்
அடிமையாய் ஒழிதல்....

அருண்குமார் சே

No comments: