Wednesday, April 8, 2009

ஒரு பேருந்து நிலையம்....

முதலிரவு தம்பதிகளாய்
முகம் உரசி
மோகம் தணிந்து
புறமுதுகிட்டு
வியாபித்து கிடக்கும்
பேருந்துகள் நடுவே...

புதுப்பட பாடல் செவிகிழிக்க
தப்பு தப்பாய் பரிமாறப்படும்
தேநீர் கோப்பைகள் ....

ஊக்கு குத்தி கொண்டுவந்த
துணிக்கடை பை
பேருந்து துரத்தும் போது
அறுந்து விழும்...

சின்ன சின்ன சட்டசபை
இட ஒதுக்கீட்டில் சண்டையிடும்...

உலக சந்தை, உழவர் சந்தை
பரவி கிடக்கும் நடைபாதை எங்கும்
வழக்கு நடக்கும் நீக்கிட கோரி
வாழ்க்கை நடக்குமா??...

மூத்திரனாற்றம்
குடற்பைநிறையும்...

சஞ்சீவி மலையோடு அனுமன்
தார்ச்சாலையில் பிச்சை எடுப்பார்....

யாவும் கடந்து
ஏதோ தேடலில்
நிகழ்ந்தேறிக்கொண்டேயிருக்கின்றன
முடிவில்லா பயணங்கள்...

அருண்குமார் சே

No comments: