Tuesday, April 7, 2009

அடி மத்தாப்பு மனசுக்காரி...

கருவாச்சி காவியமே
கட்டுடைத்த ஓவியமே
நெஞ்சு கூட்டுகுள்ள
பஞ்சா அடஞ்சவளே...
குத்த வச்ச பொட்டப்புள்ள
நூறு பேரு இருந்தாலும்
பத்த வச்ச ஒத்த புள்ள
பாவி மக நீ தானே....
முத்தாத முத்து ரெண்ட
முந்தானை மறைக்கும் போதே
பொத்தாத ஊர் வாயி
பொழப்பத்து பேசுதடி....
கிறுக்கு பிடிச்ச பய
முறுக்கும் சண்டி பய
உன் கொலுசு மணிக்குள்ள
கொலு பொம்மை ஆனேனே....
அம்மன் திருவிழான்னு
அச்சடிச்ச சூட்சமம்
உன்ன பாக்கதான்னு
ஊருக்கு தெரியாது....
கள்ளிப்பாலு செடிதானே
கல்வெட்டா மாறுச்சு - உன்
நிழல்பட்ட நெனப்புலதான்
ஊர் கேணி ஊறுச்சு...
உன் பாவாடை நூலுகுள்ள
மனசு மட்டும் சிக்கிகுச்சு
ஒத்தசடை ரிப்பன்குள்ள
என் உசிரு தங்கிடுச்சு....
விட்டதுல கட்டி வச்ச
விறால்மீன் சட்டி அத
அப்பன் ஆத்தா அறியாம
அமிர்தமா கொண்டு வர....
விறால் எது விரல் எது
தெரியாம நான் கடிக்க
செல்ல கோவம் அதுக்கு
சொத்து எழுதி வைக்கலாம்டி....
அட்டை வாங்கி தந்ததில்ல
அடுக்கு மொழி சொன்னதில்ல
மேட்டுகுடி பொழப்பெல்லாம்
மேம்போக்கு வேசம்தாண்டி....
என்னைக்கு சொல்லிகிட்டோம்
காதலிக்கிறோம் கருமமுன்னு
நெனப்புல நெருப்பெரிய
நெசந்தான்னு புரிஞ்சிகிட்டோம்....

அருண்குமார் சே

No comments: